சர்வதேச ரீதியாக மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறையாக வங்கித்துறை கானப்படுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளும் இன்று வங்கிகளின் கைகளிலே தங்கியிருக்கின்றன. இவ்வாரு வங்கிகள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பிரதான இடத்தை வகிக்கின்றன.
பாரம்பரிய வங்கி முறைகள் வட்டியை அடிப்படையாக கொண்டே இயங்குகின்றன. ஆனால் இஸ்லாம் வட்டியை மிக கடுமையாக எதிர்க்கிறது. இந்த வகையில் வட்டி வங்கி முறைக்கு மாற்றீடாக புதிய ஒழுங்குகளை இஸ்லாமிய உலகம் வேண்டி நின்றது. இதன் விளைவாக நடைமுறையில் இருந்த பாரம்பரிய வங்கி முறைகளைகளுக்கு மாற்றீடாக ஷரீஆ அனுமதித்த வர்த்தகங்களும் முகவர் ஒப்பந்தங்களும் நடைமறைபடுத்தக்கூடிய இஸ்லாமிய வங்கிமுறை தோற்றம் பெற்றது.
இஸ்லாமிய வங்கிகளின் தோற்றத்துக்கான அத்திவாரம் சுமார் 1400 வருடங்கள் பழமையானதாகும். பண்டைய காலத்தில் உலகெங்கும் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்ட அறேபிய வர்த்தகர்களிடம் பிரயாணம் செய்ய முடியாத அறேபிய மக்கள் தங்களிடமிருந்த சொத்துக்களை பொருட்களாகவும் பணமாகவும் வழங்கி இலாப நட்டத்தில் பங்குபெறல் என்ற அடிப்படையில் பங்காளர்களாக இருந்து தொழில்களில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது. இவ்வாரான, இஸ்லாமிய வங்கி செயற்பாடுகளை ஒத்த விடயங்கள் நபித்தோழர்கள் காலத்திலும் மிக எளிமையான அமைப்பில் நடைமுறையில் இருந்திருக்கின்றன.
உமர் (றழி) அவர்களது ஆட்சி காலத்தில் பைத்துல்மால் எனும் பொது நிதியம் பொதுமக்களிடமிருந்து சேமிப்புக்களை பெற்று அச்சேமிப்புக்களை இலாப நட்டங்களை பகிர்ந்துகொள்ளல் என்ற அடிப்படையில் முதலீடு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேவையெற்படும்போது மக்களுக்கு கடன் வசதிகளை வழங்கி அவர்களது வியாபார நடவடிக்கைகளுக்கு வலுவூட்டியதாகவும் வரலாற்று சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன.
மேலும், உமர் (றழி) அவர்கள் பைத்துல்மாலுக்கென ஒரு தனியான விசாலமான கட்டிடத்தையும் கட்டினார்கள். பெரும் பாலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு அது மையமாக காணப்பட்டது. இந்த பைத்துல்மால் நிலையங்களை பற்றி பேராசிரியர் வில்சன் அவர்கள் “அவை இன்றைய மத்திய வங்கி போன்று தொழில்பட்டிருக்கின்றன.” எனக் குறிப்பிடுகிறார். ( Gilbert : The History Principle and Practice of Banking)
எனவே இன்றைய இஸ்லாமிய வங்கிகள் மேற்கொள்ளும் பணிகளில் அதிகமான மற்றும் பிரதானமான பணிகளை நபி )ஸல்( அவர்களின் காலத்திலும் கலீபாக்களின் காலத்திலும் வங்கி என்ற நாமம் சூட்டப்படாமல் தனி மனிதர்களும் வர்த்தகர்களும் பைத்துல்மால் எனும் நிறுவனமும் எளிய முறையில் நடைமுறைப்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகிறது.
எவ்வாராயினும், இன்று உள்ளது போன்று இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் நவீன முறையில் அமைந்த இஸ்லாமிய வங்கிகள் 1960 களில் தோற்றம் பெற்றன. அக்காலத்தில் வட்டியை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய வங்கிகளின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வங்கிகளின் தொடர்பின்றி மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது இதற்கு மாற்றீடாக இஸ்லாமிய வறையறைக்குள் இயங்கும் இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் அவசியத்தை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் சிந்திக்க துவங்கினர்.
அதன் விளைவாக முதலாவது இஸ்லாமிய வங்கி எகிப்தின் மிட்கம்ர் என்ற இடத்தில் தோற்றம் பெற்றது. இவ்வங்கி Mitgumr Saving Association என்ற பெயரில் 1961–1964 இடைப்பட்ட காலத்தில் தொழிற்பட்டது. பின்னர் 1975 ல் அஷ்ஷேய்க் ஸஈத் அஹ்மத் என்பவரின் முயர்ச்சியினால் துபாயில் ஆரம்பிக்கப்பட்ட துபாய் இஸ்லாமிய வங்கி சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதுவே முதலாவது வெற்றிகரமான இஸ்லாமிய வங்கி என கூறப்படுகிறது. அதன் பின், 1980 களில் இஸ்லாமிய வங்கித்துறை வளர்ச்சியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.
· சூடான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தங்களது அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் இஸ்லாமிய ஷரீஆவுக்கு அமைவாக மாற்றிக்கொண்டன.
· 1981 இல் சவூதி அறேபியாவில் இஸ்லாமிய பொருளியல் ஆய்வு நிலையமான IRIT (Islamic Research and Training Institution) என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
· 1983 இல் மலேசியாவில் BIMB வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
· முதலாவது தகாபுல் நிறுவனம் 1984 இல் மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
1990 களில் இஸ்லாமிய வங்கி முறையின் வளர்ச்சி ஒரு புதிய பரிணாமத்தை கண்டது. அதாவது பாரம்பரிய வங்கிகள் தங்களது வங்கிகளுக்குள் இஸ்லாமிய வங்கி பிரிவுகளை (Islamic Window) உருவாக்கி செயற்படுத்த தொடங்கின. மேலும் 1991 இல் இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான சர்வதேச தர நிலைகள் மற்றும் நியமனங்களை வழங்கும் பிரதான நிறுவனமாக AAOIFI (Accounting and Auditing Organization for Islamic Financial Institutions) என்ற நிறுவனம் பஹ்ரைனில் ஸ்தாபிக்கப்பட்டது. அத்தோடு The Dow Jones என்ற இஸ்லாமிய பங்குச்சந்தை நிறுவனமும் தோற்றம் பெற்றது.
இவ்வாரு சர்வதேச ரீதியாக வேகமாக வளர்ச்சியடைந்த இஸ்லாமிய வங்கித்துறை 2008 இல் 75 க்கு மேற்பட்ட நாடுகளில் 300 க்கு மேற்பட்ட இஸ்லாமிய நிதி நிறுவனங்களை கொண்டிருந்ததாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்திருந்தது.
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு, அதுவரையில் நடைமுறையில் இருந்த 1988 ஆம் ஆண்டைய 30 ஆம் இலக்க வங்கிச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இஸ்லாமிய வங்கி முறை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த திருத்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பின்னர் 2011 இல் அமானா வங்கி முதலாவது இஸ்லாமிய வங்கியாக நாணய சபையால் அங்கீகரக்கப்பட்டது.
இது தவிர, பாரம்பரிய வங்கிகளின் இஸ்லாமிய பிரிவுகளாக MCB வங்கியின் இஸ்லாமிய பிரிவு, இலங்கை வங்கியின் அந்நூர், கொமர்ஷல் வங்கியின் அல் அதாலா, HNB வங்கியின் அந் நஜாஹ் இன்னும் LOLC அல் பலாஹ், People Leasing அஸ்ஸபா, LB Finance அஸ் ஸலாமா, கொழும்பில் செயற்பட்டு வரும் First Baraka, அழுத்கம நகரில் இயங்கும் Aluthgama Investment Fund, அக்குரணையில் இயங்கும் Islamic Services Society, மாவனல்லையில் இயங்கும் Crescent Islamic Financial Services Ltd போன்ற இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாரு இஸ்லாமிய வங்கிகள் உலகம் முழுவதும் வேகமாக பரந்து விரிவடைந்து செல்கின்றன.
https://mnmazinimani.blogspot.com/2017/08/blog-post.html
https://mnmazinimani.blogspot.com/2017/08/blog-post.html