இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா. 100 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர். இசைஞானி இந்து மதத்தில் பக்தி பழம். தேவாரம், திருவாசகத்தை கரைத்து குடித்தவர். சரஸ்வதி தனக்குள் இருப்பதாக நினைப்பவர். அவரது மகன் முஸ்லிமாக மாறியது அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிறது. நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எனக்கு என்னோட அம்மான்னா உயிர். என்னோட கஷ்டங்களில் கூட இருந்தவங்க. தன்னந்தனி தூணாக இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தினவங்க. அவங்களோட இழப்பு என்னை மாத்திடுச்சு. ஒரு வேலையாக மும்பை போய்விட்டு திரும்பியபோது அம்மா மரணப்படுக்கையில இருந்தாங்க. நானும், தங்கையும் அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். போற வழியில அம்மா என் கையை இருக்கமா பிடிச்சிருந்தாங்க. திடீர்னு கை நழுவி விழுந்தது. அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க. ஒரு வினாடிக்கு முன்பு அவருக்குள்ள இருந்த ஜீவன் இப்போ எங்க போச்சுன்னு எனக்குள்ள கேக்க ஆரம்பிச்சேன். அதுக்கான விடை கிடைக்கல.
அம்மாவோட பிரிவு என்னை தனிமைப்படுத்திடுச்சு. ரொம்ப கவலையில இருந்த நேரம் ஒரு முஸ்லிம் நண்பர் மெக்கா போய்விட்டு திரும்பியிருந்தார் அவர் என்னிடம் "யுவன் நீ ரொம்ப கவலையில இருக்கே, தாங்க முடியாத கவலை வரும்போது இந்த முசல்லாவில் (தொழுகைக்கு பயன்படும் தரைவிரிப்பு) கொஞ்ச நேரம் உட்காரு போதும்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நம்பிக்கை இல்லாம அதை மூலையில போட்டேன்.
ஒரு கட்டத்துல அம்மா கவலை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சது. மன அழுத்தம் அதிகமாச்சு. அந்த முசல்லா நினைவு வந்து அதன் மீது உட்கார்ந்து யா அல்லா... என்னோட பாவங்களை மன்னிச்சு, என்னை இந்த கவலையிலிருந்து வெளியில கொண்டு வந்த விடுன்னு கத்தி கதறினேன். "வா... இஸ்லாத்துக்கு வந்துவிடு"ன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு வந்துச்சு. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை வார்த்தையில் வெளிப்படுத்த முடியாது.
அன்றிலிருந்து அதாவது 2012ம் ஆண்டிலிருந்து திருக்குரான் மொழிபெயர்ப்புகளை படிக்க ஆரம்பிச்சேன். தொழுகை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை கத்துக்க ஆரம்பிச்சேன். 2014 ஜனவரியில் முஸ்லிமாக மாறுவது என்று முடிவு செய்தேன். மரணத்தின் தருவாயில் எங்கம்மா "எனக்கு பிறகு நீ தனிமரமாயிடுவே இஸ்லாம்ங்ற மரத்தின் கீழ் ஒதுங்கிக்கோ"ன்னு எங்கம்மா சொன்னதாவே நான் எடுத்துக்கிட்டேன்.
நான் முஸ்லிமாக மாறியது என் அப்பாவுக்கு பிடிக்கல. என் அண்ணனும் அண்ணியும் என் பக்கம் நின்னாங்க. படங்களில் என் பெயர் யுவன் ஷங்கர் ராஜான்னு வர்றதால இன்னும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ரிக்கார்டுகளில் பெயரை மாற்றவில்லை. விரைவில் மாற்றுவேன். என்றார் யுவன். http://cinema.dinamalar.com/
No comments:
Post a Comment